இறைமக்கள் பேரவை 2024 – ஆயரின் சுற்றுமடல்
அன்பிற்கினிய இறைமக்களே,
தந்தை, மகன், தூய ஆவியார் என மூவொரு இறைவனாக இணைந்து நம்மை வழிநடத்தி, நம்மையும் இணைந்துப் பயணிக்க அழைக்கும் ஆண்டவரின் பெயரால் உங்களை வாழ்த்துகின்றேன்.
1962 முதல் 1965 வரை நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவையில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக “கிறிஸ்துவின் பணியைச் செயல்படுத்துவதற்கு காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லா காலக்கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருஅவையின் கடமையாகும்” (இன்றைய உலகில் திருஅவை, எண் 4) என உரைத்தது. அதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா உரோமையில் 2015 ஆம் ஆண்டு நடந்தபோது உரையாற்றிய நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இணைந்து பயணிக்கும் பாதையே மூன்றாம் ஆயிரமாண்டில் திருஅவையிடம் கடவுளின் எதிர்பார்ப்பாகும்” (திருத்தந்தையின் உரை, அக் 17, 2015) என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ‘இணைந்து பயணிக்கும் திருஅவை: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்பு’ என்னும் பதினாறாம் ஆயர்கள் மாமன்றம் 2021-2023ஃ24 என்பதையும் தன் விருப்பமாக முன்மொழிந்தார்.
இவ்வாறு இணைந்து பயணிக்க உலகத் திருஅவைக்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்ததன் பின்புலத்தில், ஆயர் மாமன்றத்தின் முதல்கட்ட சந்திப்பு அக்டேபர் 04 முதல் 29 வரை உரோமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நமது கோட்டாறு மறைமாவட்டத்திலும் இணைந்துப் பயணிப்பதை வலுப்படுத்த முயற்சிக்கின்றோம். நமது மறைமாவட்டத்தின் நூற்றாண்டுவிழாவை 2030 – ஆம் ஆண்டில் எதிர்நோக்கியிருக்கும் நாம் நமது பார்வைகளை மீண்டும் கூர்மைப்படுத்தவும், பாதைகளை இன்னும் தெளிவுற அமைக்கவும் இறைமக்கள் பேரவை துணைநிற்கும் என உளமார நம்புகின்றோம். இறைமக்கள் பேரவை என்பது இறைமக்கள் ஒன்றாகக் கூடிவந்து தூய ஆவியாரின் வழிகாட்டலில், மாறிவரும் இன்றைய காலச்சூழலைக் குறித்து மனம்திறந்து உரையாடி, ஆய்வுசெய்து, ஒருவருக்கொருவர் செவிமெடுத்து, தேர்ந்துத் தெளிந்து, இணைந்து முடிவெடுத்து மறைமாவட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் அருள்நிகழ்வாகும்.
நமது மறைமாவட்டத்தில் 2000 – வது ஆண்டில் முதன்முதலாய் இறைமக்கள் பேரவை நடத்தப்பட்டது என்பதை நாம் நன்கறிவோம். அப்பேரவையில் அக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு நமது மறைமாவட்டம் செயல்படுவதற்கான கொள்கைகள் பல வகுக்கப்பட்டன. அதற்கு முன்னரும் ஒருசில கொள்கை ஏடுகளும் வெளிவந்துள்ளன. இந்நிலையில், ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓர் இறைமக்கள் பேரவைக்கானத் தேவையை நாம் உணர்கின்றோம்.
நான் ஆயராகப் பொறுப்பேற்ற முதலே பல தளங்களில் இறைமக்கள் பேரவைக்கானத் தேவைகள் முன்வைக்கப்பட்டன. முதல் இறைமக்கள் பேரவை நடந்தமுடிந்து கால்நூற்றாண்டளவு ஆகிவிட்ட நிலையில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழல்கள் மிகவும் மாறிவிட்டன் மாறிக்கொண்டிருக்கின்றன. அவை நம் மறைமாவட்ட பணியிலும் வாழ்விலும் வலுவானத் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இச்சூழலில் நாம் இறைமக்களாகக் கூடி வருவதும் இவற்றைப் பற்றி சிந்திப்பதும் நலமென எண்ணுகின்றோம். பிற மறைமாவட்டங்களில் இல்லாத பல நடைமுறைக் கொள்கைகளும் பங்கேற்பு அமைப்புகளும் நம் மறைமாவட்டத்தில் இருந்தாலும், திருஅவையிலும் பரந்துபட்ட சமூகத்திலும் நாம் இன்னும் அதிகமாக பங்கேற்க வேண்டிய தேவையையும் உணர்கின்றோம். அதே நேரத்தில் சிலர் மட்டுமே பங்கேற்பதையும், பலர் பல்வேறு காரணங்களால் விலகிநிற்கும் நிலையையும் காணமுடிகிறது. இச்சூழல்களை அருள்பணியாளர்களின் அன்புறவுக் கூட்டங்களிலும், மறைமாவட்ட மற்றும் மறைவட்ட மேய்ப்புப்பணிப் பேரவைக் கூட்டங்களிலும் தெளிவாக உணர முடிகிறது.
மாறிவரும் இக்காலச் சூழலில் “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்ற ஆண்டவரின் வாக்குறுதிக்கு இணங்க கோட்டாறு திருஅவையின் அகவாழ்வைப் புதுப்பித்தல் மற்றும் திருஅவையிலும் குடிமைச் சமூகத்திலும் நமது ஈடுபாட்டை வளர்த்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்து நம்மையே நாம் சுயஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையும் கடவுளின் அழைப்புமாகக் காண்கின்றோம்.
இறைமக்களாகிய நாம் அனைவரும் பல தளங்களில் இணைந்துவந்து நமது மறைமாவட்டத்தில் நம்பிக்கை வாழ்வு எவ்வாறு உள்ளது? பல்வேறு நிலைகளில் உறவு மற்றும் உரையாடல் எப்படி இருக்கிறது? பங்கேற்பு அமைப்புகள் மற்றும் நிர்வாக முறை எவ்வாறு இயங்குகின்றன? குடிமைச் சமூக ஈடுபாடு எந்த அளவுக்கு உள்ளது? என இயேசுவின் பார்வையில் இணைந்து சிந்திப்பது நலமென எண்ணுகின்றோம்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கோட்டாறு மறைமாவட்ட இறைமக்கள் பேரவையை “இணைந்து பயணிக்கும் கோட்டாறு திருஅவையாக” என்னும் மையச்சிந்தனையில் வருகின்ற நவம்பர் 01 ஆம் தேதி நாம் தொடங்கவிருக்கிறோம். அதைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள், கருத்துக் கேட்புகள், அவற்றின் தொகுப்பறிக்கை உருவாக்கத்திற்குப் பின் 2024 ஜூன் மாதம் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரியில் வைத்து இறைமக்கள் பேரவைக் கூடுகை நடைபெறும். அதில் நாம் தேர்ந்துத் தெளிந்து எடுக்கும் முடிவுகள் நமது மறைமாவட்டத்தின் செயல்பாட்டுக்கான கொள்கைகளாக வகுக்கப்பட்டு இறைமக்கள் பேரவை ஏடு வெளியிடப்படும்.
இந்நேரத்தில் அன்பு மக்களே! இறைமக்கள் பேரவைத் தொடக்கவிழாவைப் பற்றி சிறப்பாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இறைமக்கள் பேரவையின் தொடக்கவிழா நிகழ்வுகள் இரண்டு மட்டங்களில் நடைபெறவிருக்கின்றன. முதலாவதாக, மறைமாவட்ட அளவில் 01.11.2023, புதன்கிழமை, அனைத்துப் புனிதர்கள் பெருவிழா நாளில் மாலை 5.00 மணிக்கு புனித சவேரியார் பேராலயத்தில் வைத்து உங்களோடு இணைந்து நான் இதனைத் தொடங்கி வைக்கின்றேன்;. அந்தத் தொடக்கவிழா நிகழ்வில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். அன்றைய நாளில் நம் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் மாலை 5.00 மணிமுதல் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் இறைமக்கள் பேரவைக்கான அழைப்பு மணியாகவும் நமது ஒன்றிப்பின் அடையாளமாகவும் எல்லா ஆலயமணிகளையும் முழங்கச்செய்ய கேட்டுக் கொள்கின்றேன்.
இரண்டாவதாக, பங்கு அளவில் 05.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலைத் திருப்பலியை இறைமக்கள் பேரவையின் தொடக்க விழா சிறப்புத் திருப்பலியாக எல்லா பங்குகளும் கொண்டாட அழைப்பு விடுக்கின்றேன். தொடக்க விழாவிற்கான குறிப்புகள் மற்றும் திருப்பலிக்கான குறிப்புகள் தயாரித்து உங்களுக்கு வழங்கப்படும். இறைமக்கள் பேரவையின் இலக்கு மக்களான சிறார், இளைஞர், இருபால் பொதுநிலையினர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார், பிற சபையினர், பிற சமயத்தவர் மற்றும் மாற்றுக் கருத்துடையோர்களை உள்ளடக்கி தொடக்கவிழா அமையும் வகையில் வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுமாறு வேண்டுகின்றேன்.
ஒவ்வொரு பங்கிலும் கோட்டாறு மறைமாவட்ட இறைமக்கள் பேரவை ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி, எல்லாருடைய கருத்துக்களும் குறிப்பாக, பல நேரங்களில் கவனம் பெறாதவர்களின் குரல்களும் நமது இறைமக்கள் பேரவையில் ஒலிக்கச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். இறைமக்கள் பேரவைக்கான சிறப்பு இறைவேண்டலை ஆலயங்களில் வழிபாடுகளின்போது இணைந்து செபிக்க உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்படுவதுபோல் “நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்” (உரோ 12: 5) என்பதை மனத்தில் நிறுத்துவோம். தொடக்கத் திருஅவையுடன் உடனிருந்து உடன்பயணித்த அன்னை மரியாவின் பரிந்துரையை நம் இறைமக்கள் பேரவைக்காக சிறப்பாக நாடுவோம்.
இணைந்து பயணிப்போம்… இறையாட்சிப் பணித்தொடர்வோம்!
கிறிஸ்துவின் மனநிலையில்,
ஆயர் நசரேன் சூசை
FlagBrochure
Agenda
Scroll
Sticker
Prayer-Card